ஊட்டி ஸ்ரீமதுரை பகுதியில் பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
- ஏலக்காய், காபி, பாக்கு உள்ளிட்ட பயிர்களை கடந்த சில வாரங்களாக தினமும் சேதப்படுத்தி வருகிறது.
- சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை பகுதியில் காட்டு யானை விவசாய நிலத்துக்குள் புகுந்து ஏலக்காய், பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். முதுமலை வனப்பகுதியில் இருந்து தினமும் இரவு 2 காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கொல்லி பகுதியில் ஏலக்காய், காபி, பாக்கு உள்ளிட்ட பயிர்களை கடந்த சில வாரங்களாக தினமும் சேதப்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு ஜார்ஜ் உள்ளிட்ட சில விவசாயிகளின் பயிர்களை 2 காட்டு யானைகள் நாசம் செய்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை உடைத்து தின்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- முதுமலை வனத்திலிருந்து வெளியேறி தினமும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு பல முறை தகவல் தெரிவித்தும் நேரில் வருகின்றனர். ஆனால் காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. காட்டு யானைகள் வருகை குறித்து தகவல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
இதனால் தொடர்ந்து பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாய பயிர்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயத்தில் உள்ள பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.