உள்ளூர் செய்திகள்

முருகன்குறிச்சி பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை துணை கமிஷனர் சீனிவாசன் வழங்கிய காட்சி.

நெல்லை மாநகர பகுதியில் அதிவேகமாக செல்லும் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்படும்- போலீஸ் துணை கமிஷனர் பேட்டி

Published On 2022-07-06 09:39 GMT   |   Update On 2022-07-06 09:39 GMT
  • பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
  • நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.

நெல்லை:

பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதனை மாநகர கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா வழங்கினார். அதேபோல் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு திருக்குறள் எழுதுமாறு அறிவுறுத்தினார். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இதற்காக நெல்லை மாநகர காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

நெல்லை மாநகர பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் தலைகவசம் அணியாமலும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வருகிறார்கள். இது தொடர்பாக 1,200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகர பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் சென்றால் அவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் காவல் நிலையத்திற்கு அவர்களின் பெற்றோர்களை அழைத்து வரப்பட்டு எச்சரிக்கை செய்யப்படும்.

அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News