வால்பாறை செல்வதற்கான தடை நேரம் தளர்த்தப்படுமா?
- தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் வனத்துறை ஆலோசனை
- சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து மாதந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறை சார்பில் சமீபத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாக வால்பாறையில் உள்ள ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்தனர். வால்பாறையில் சுற்றுலாவை நம்பி இருக்கும் அனைவருடைய வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வால்பாறை எம்.எல்.ஏ. கந்தசாமி தலைமையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ் தேஜா முன்னிலையில், வால்பாறையில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது, தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 6 மணிக்கு மேல் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்கின்றன. இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் வரும் போது மனித வனவிலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது. இதனால் 6 மணிக்கு மேல் வால்பாறை செல்வதை பயணிகள் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த தடை நேரத்தை தளர்த்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலனை செய்யப்படும் என்றனர்.