உள்ளூர் செய்திகள்

இடி-மின்னலுடன் சேலத்தில் 86.4 மி.மீ மழை கொட்டி தீர்த்தது

Published On 2024-06-04 07:52 GMT   |   Update On 2024-06-04 07:52 GMT
  • பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது.
  • அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

சேலம்:

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சேலத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று மதியம் வெயில் அடித்தது.

மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து 6 மணிக்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் சிறிது நேரம் மழை விட்டது.

அதன் பிறகு 2-வது முறையாக பெய்த கனமழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த கனமழையால் கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அன்னதானப்பட்டி அஸ்தம்பட்டி, 4 ரோடு, மேயர் நகர் உள்ளிட்ட நகரில் பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

ஓமலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. சேலம் புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

தாழ்வான பலபகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நின்ற பிறகு வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.

சேலத்தில் அதிகபட்சமாக 86.4 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கரியகோவில், ஓமலூர், டேனீஷ்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஏற்காடு - 37,

கரிய கோவில் - 58,

ஓமலூர் - 15,

டேனீஷ் பேட்டை - 3.2 என மாவட்டம் முழுவதும் 207.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News