கிருஷ்ணகிரியில் பெண் கொலை: கணவரை பிடிக்க தனிப்படை அமைப்பு
- குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.
- கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிட்டம் பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கவுரி (41). இவர்களுக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனர். விஜி ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார்.
மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சின்னத்துரை-கவுரி தம்பதியினர் கடந்த 30 ஆண்டு களாக தேன்கனிக்கோட்டையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொத்தை விற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளியில் இடம் ஒன்றை வாங்கினார்கள். மீதி பணத்தை கணவர்-மனைவி 2 பேர் பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்தனர்.
மேலும் கணவன் - மனைவி 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே அம்மன் நகர் 2-வது கிராசில் வீடு ஒன்றில் போகியத்திற்கு குடி போனார்கள். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருந்த பிரச்சினையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுரி கிருஷ்ணகிரி அருகே மேலேரிகொட்டாயில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை சமாதானம் பேசி அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை அரிவாளால் மனைவியின் கழுத்து, கை, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் கவுரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
அவரை கொலை செய்ததும் சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் நேற்று காலை ரத்த வெள்ளத்தில் வீட்டில் கவுரி பிணமாக கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக சின்னத்துரையை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர்.