கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை கேனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
- மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்தபோது, அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மண்எண்ணை கேனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் முத்தழகி என்பவர், தனது நிலத்தில் விவசாயம் செய்து வருவதும், அதற்காக அருகில் உள்ள மற்றொரு நிலத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்து வருவதும், தற்போது அந்த நிலத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார்.
இதனால் 2 ஆண்டுகளாக பயிர் செய்ய முடியாமல் சிரமப்படுகிறேன். எனவே ஆழ்துளை கிணற்றிலிருந்து பயிர் செய்யக்கூடிய நிலத்திற்கு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்ததாக கூறினார். உடனே போலீசார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.