உள்ளூர் செய்திகள்

1 முதல் 5 -ம் வகுப்பு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவி குழுவினர்

Published On 2023-05-10 09:08 GMT   |   Update On 2023-05-10 09:08 GMT
  • அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
  • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டு முதல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு காலை உணவு தயாரிக்க கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி, அளவிலான முதன்மை குழு மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பின்வரும் நிபந்தனைகள் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே தொடக்கப் பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை அப்பள்ளியில் தொடக்கப் படிப்பு முடிந்து வேறு பள்ளிக்கு சென்று விட்டால் அச்சுய உதவிக்குழு உறுப்பினர் காலை உணவு தயாரிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு தகுதியான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார்.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்த பட்சம் 10 -ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். அதனை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சமையல் செய்வதற்கு அனுபவம் தேவை என்பது இதில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஆர்வம் மட்டுமே இருந்தால் போதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் நிபந்தனையில் வயது வரம்பும் இடம்பெறவில்லை. இதனால் இப்பணியில் சேர மகளிர் சுய உதவி குழுவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது. 

Tags:    

Similar News