பழனியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்
- நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பெண்கள் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனி:
பழனி நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இன்று இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் பழனி நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
தொடர்ந்து அதிகாரிகள் யாரும் இல்லாததால் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி டவுன் போலீசார் பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை என்றும் நிலத்தடி நீர் குழாயும் பழுதடைந்து சரிசெய்யப்படவில்லை என்றும் இது குறித்து பலமுறை வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரி களிடம் முறையிட்டும் நடவடிக்கையும் எடுக்காத தால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து குடிநீர்குழாய் உடைப்பை சரி செய்து விநியோகம் தொடங்கியுள்ளதாகவும், இன்று மாலை 5வதுவார்டு பகுதிக்கு குடிநீர் வரும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பெண்கள் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.