மகளிர் உரிமைதிட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது
- டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பு தொடங்கும்.
- காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நியாயவிலை கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவர்.
டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பு தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத்தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் மற்றும் 2-ம் கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டவுடன், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலை கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.
முதல்கட்டமாக மயிலாடுதுறை வருவாய் வட்டத்தில் ஆனந்ததாண்டவபுரம், அருவாப்பாடி, ஆத்தூர், பூதங்குடி உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், சீர்காழி வருவாய் வட்டத்தில் ஆச்சாள்புரம், அகரபெருந்தோட்டம், அகரவட்டாரம், அளக்குடி உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளிலும்,
குத்தாலம் வருவாய் வட்டத்தில் ஆலங்குடி, அனந்தநல்லூர், அரிவேளூர், அசிக்காடு உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், தரங்கம்பாடி வருவாய் வட்டத்தில் ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டு, ஆனைக்கோயில், அனந்தமங்கலம் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலைக்கடை பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.
2-ம் கட்டமாக மயிலாடுதுறை வருவாய் வட்டத்தில் அகரகீரங்குடி, ஆனைமேலகரம், அருண்மொழித்தேவன், சோழம்பேட்டை உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், சீர்காழி வருவாய் வட்டத்தில் ஆச்சாள்புரம், ஆதமங்கலம், அகணி, அகரஎலத்தூர், ஆலங்காடு உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், குத்தாலம் வருவாய் வட்டத்தில் கீழையூர், குத்தாலம், மாதிரிமங்கலம், மேக்கிரிமங்கலம், மேலையூர் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், தரங்கம்பாடி வருவாய் வட்டத்தில் அகராதனூர், அகரவல்லம், அரசூர், அரும்பாக்கம் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும் 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக்கடை பகுதிகளிலும் 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டரின் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04364-
222588. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.