ஊட்டி கேத்தியில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
- நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
- காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.
ஊட்டி
நேபாளத்தை சேர்ந்தவர் ரமேஷ் பகதூர். (வயது 42)/இவர் தற்போது நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் தங்கியிருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக கிளிப் ஹவுஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டெருமை அவரை தாக்க முயன்றது. காட்டெருமை வருவதை பார்த்ததும் ரமேஷ் பகதூர் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் காட்டெருமை அவரை விடாமல் துரத்திச் சென்று முட்டி வீசியது.
இதில் அவர் மார்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.