உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறையை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

அம்பை அருகே கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை-கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-06 09:40 GMT   |   Update On 2023-01-06 09:40 GMT
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை அம்பை அருகே உள்ள கீழஆம்புரில் இன்று நடைபெற்றது.
  • அம்பை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக புகழ் பெற்ற மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

நெல்லை:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை அம்பை அருகே உள்ள கீழஆம்புரில் இன்று நடைபெற்றது.

இதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இதில் அம்பை நகராட்சி பகுதிகளில் மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வரும் கைவினை கலைஞர்களுக்கு உலக புகழ் பெற்ற அனுபவம் மிக்க பயிற்சியாளரை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

அம்பை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக புகழ் பெற்ற மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் குழந்தைகள் விரும்பி விளையாடும் செப்பு சாமான்கள் போன்றவையும் அடங்கும். நலிந்து வரும் இந்த பாரம்பரிய தொழில்முறையில் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என்பது அவர்கள் நீண்ட நாட்களாக கூறிவரும் கோரிக்கையாகும்.

இதற்கு சீன பிளாஸ்டிக் பொம்மை பொருட்களும் மற்ற மாநிலங்களின், உற்பத்தியாளுடான போட்டியும், தொழில் முன்னேற்றத்திற்கான முதலீட்டின்மையும் காரணமாக கூறப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், தொழில் முதலீடுகள் குறைவாக உள்ளதால் தரம் குறைந்த மூலப்பொருட்களை உபயோகிக்க வேண்டியுள்ளதாகவும், இதனால் உற்பத்தி செய்யும் பொருட்கள் நல்ல விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் இளைய தலைமுறையினர் இந்த தொழிலை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். காலப்போக்கில் இத்தொழில் அழிந்து விடும் என கவலை தெரிவித்தனர். இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் துணையோடு மேம்பட்ட மரக்கடைசல் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியை அனுபவமிக்க பயிற்சியாளர்கள் கொண்டு அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி ஒரு மாதம் நடைபெறும். பயிற்சியின் முடிவில் கைவினை கலைஞர்களின் தொழில் திறன் விரிவடைவதுடன் அவர்களுக்கான வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்தி தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பயிற்சி கலெக்டர் கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News