சுரண்டையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- சுரண்டை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
நெல்லை:
சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதனால் சுரண்டை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையிலான போலீசார் பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது அதில் 300 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அதனையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில், அந்த நபர் கீழ சுரண்டை மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்த திருமலைக்குமார் என்பவரது மகன் நவீன்(வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது கஞ்சா விற்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.