தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அடி உதை- வாலிபர் கைது
- வேல்முருகன் தூத்துக்குடியில் இருந்து தாளமுத்துநகர் செல்லும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- பஸ்சில் ஏறிய 3 பேரும் வேல்முருகன் மற்றும் அய்யப்பனை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மேல அழகாபுரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 23). இவர் தூத்துக்குடியில் இருந்து தாளமுத்துநகர் செல்லும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பஸ்சில் அவரது தம்பி அய்யப்பன் (19) நடத்துனராக இருந்து வருகிறார்.
இவர்கள் தூத்துக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளமுத்து நகர் வரும் வழியில் உள்ள ஜாகிர் உசேன்நகர் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயனிகளை இறக்கி விடும்போது அங்கே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த 3 பேர் எழுந்து வந்து வேல்முருகனிடம் பஸ்சை இங்கு நிறுத்தக்கூடாது என்று சத்தமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு வேல்முருகன் இப்போது நிறுத்திவிட்டேன். பயணிகளை இறக்கி விட்டு செல்கிறேன். இனிமேல் நிறுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அவர்கள் 3 பேரும் பஸ்சில் ஏறி வேல்முருகன் மற்றும் அய்யப்பனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்து உள்ளனர். காயம்பட்ட இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் தாக்குதலில் ஈடுபட்டது கணபதி நகரச் சேர்ந்த ஜார்ஜ் (29), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஜார்ஜை உடனடியாக கைது செய்த போலீசார் மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.