ஆறுமுகநேரியில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு
- கூலி தொழிலாளியான இசக்கிமுருகனுக்கு திருமணம் ஆகவில்லை.
- இவர் தனிமையில் வாடியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் புலம்பி வந்துள்ளார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இசக்கிமுத்து சென்னையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். தனது பெற்றோர் இறந்து விட்டதால் இசக்கிமுருகன் (33) வீட்டில் தனியே வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் தனிமையில் வாடியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் புலம்பி வந்துள்ளார்.
இதனால் அதே பகுதியை சேர்ந்த இவரது பெரியப்பா மகனான முருகன் (44) என்பவர் இசக்கி முருகனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இசக்கி முருகன் பின்னர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் நேற்று வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் முருகன் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இசக்கி முருகன் பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாரா யணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கிமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.