அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம்
- அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர சேலம், நாமக்கல் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
- இதில் கடந்த 30-ந்தேதி வரை 2.72 லட்–சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. 17½ வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பின்னர் இந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது. இதில் கடந்த 30ந்தேதி வரை 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பட்டப்படிப்பு படித்த இளம்பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடற்படை மற்றும் ராணுவத்துக்கும் ஆள்சேர்க்கும் பணிகள் நேற்று முன்தினம் (1ந்தேதி) தொடங்கி விட்டது. குறிப்பாக ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் சேர தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் இந்திய ராணுவம், கப்பற்படை, விமான படையில் அக்னிவீரர்களாக சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.