ஸ்ரீவைகுண்டம் அருகே ஆற்றில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு
- கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்
- தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இறங்கி வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவபெருமாள். (வயது 39). கூலி வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில் சிவபெருமாள் நேற்று காலை கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பததால் அவரது குடும்பத்தினர் சிவபெருமாளை தேடி யுள்ளனர். இதற்கிடையில் நீண்ட நேரமாக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு பைக் நிற்பதாக அப்பகுதி மக்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது சிவ பெருமாளின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்துள்ளதால் சிவபெருமாள் ஆற்றில் குளித்தபோது நீரில் இழுத்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதி ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறை யினருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
தேடும் பணி தீவிரம்
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இறங்கி சிவபெருமாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை பின்னர் வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் முயற்சி கைவிடப்பட்டது.
2-வது நாளான இன்று 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் கருங்குளம் தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழ்ப்பகுதியில் இறங்கி சிவபெருமாளை தேடும் பணியில் ஈடு பட்டனர்.
நேற்றை விட இன்று காலை ஆற்றில் தண்ணீர் குறைந்து ள்ளதால் தேடும் பணியில் முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் சகதிக்குள் சிக்கிய சிவபெருமாளை சடலமாக மீட்டனர்.