அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பாக இன்று மாலைக்குள் உரிய பதில் கிடைக்கும் - தங்கமணி
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கோடை காலத்தில் எவ்வளவு மின்சார தட்டுப்பாடு இருந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மின்சார வாரியம் தயாராக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 15 ஆயிரத்து 689 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தது.
இனி வரும் காலங்களில் 16 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி திருப்திகரமாக உள்ளது. அதனால் கோடைகாலத்திலும் மின்வெட்டு என்பதே வராது.
தமிழகத்தில் மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தில் 2 மணி நேரம் குறைப்பு என்று கோர்ட்டு கூறியுள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணியில் இதர கட்சிகள் (தே.மு.தி.க.) இணைவது தொடர்பாக இன்றுமாலைக்குள் உரிய பதில் கிடைத்துவிடும். மத்தியில் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு வாழ்வாதாரம் பெற்றுத்தரும் வகையில் போராடி நிரந்தர தீர்வாக காவிரி ஆணையத்தை பெற்றுத் தந்துள்ளனர்.
அதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தியது பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார். #MinisterThangamani