- மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும்.
- சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.
சித்திரையில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது. அந்த பிள்ளை தலை எடுக்கும் போது தகப்பனின் தலை சாயகூடும். ஆகையால் தான் ஆடியில் திருமணமும் செய்வதில்லை, தம்பதிகளையும் பிரித்து விடுகின்றனர் என்று கூறுகின்றனர். இந்த கூற்றுக்கு ஏற்றார் போல "சித்திரை அப்பன்தெருவிலே" என்று ஒரு பழமொழியே உள்ளது.
வான்மண்டலத்தில் சூரியன் தனது முழு சக்தியை வெளிப்படுத்தும் மாதம்(உச்சம்) சித்திரை. அந்த மாதத்தில் பிறக்கும் அனைத்தும் ஆளுமை செலுத்தும் என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் ஆளுமை திறன் என்பது சூரியனின் குணம்.
அதாவது சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் இயற்கையாகவே ஆளுமை திறனோடு தான் பிறக்கும். ஆகையால் தான் அது அவனின் தந்தைக்கு ஆபத்தாகிவிடுகிறது.
மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும். ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதே விதி. ஆகையால் தான் சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.
ஆனால் அவர்கள் சொல்வது போல உயிர் பலி கேட்பதற்கு எல்லாம் வாய்ப்பு மிக மிக குறைவு. ஒருவேளை அக்குழந்தை ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன், கோடியில் ஒருவன் போன்ற நிலைக்கு உயருமேனில் அப்படி நடக்க வாய்ப்புள்ளது. அதுவும் 100% கிடையாது.
இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பலம் கூட கூட உங்கள் தந்தையின் பலம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு தலைவனை போல உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள். உங்கள் தந்தை ஒரு பிள்ளையை போல உங்கள் நிழலில் வாழ தொடங்கிவிடுவார், அவ்வளவுதான்.
ஆனால் இவ்விதி பெண்பிள்ளைகள் பிறந்தால் பொருந்தாது. காரணம் சூரியன் என்ற கிரகத்தை குறிக்கும் உறவு காரகத்துவங்கள் யாதெனில் தந்தை மற்றும் மூத்த மகனே. ஆகையால் சித்திரையில் பெண்பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு நன்மையே அன்றி தீமை கிடையாது.
ஆடியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்வதும் சித்திரையில் ஆண்குழந்தை பிறப்பதும் ஒரு தந்தைக்கு வேண்டுமானால் பெரிதளவு நன்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிறக்கும் அக்குழந்தைக்கு அது நன்மையே.
என்னதான் நாம் தவிர்த்தும் பிரித்தும் வந்தாலும் இதை எல்லாம் மீறி சிலர் ஆடியில் சேர தான் போகிறார்கள், சித்திரையிலும் குழந்தை பிறக்க தான் போகிறது. காரணம் இயற்கையின் கட்டமைப்பு அப்படி. அதை மீற இங்கு யாரால் முடியும்?
-கோகுல மணிகண்டன்