கதம்பம்

விண்ணில் ஒரு மதுக்கடல்!

Published On 2024-09-09 22:45 GMT   |   Update On 2024-09-09 22:45 GMT
  • மது விண்வெளியில் கடலாக மிதந்துகொண்டுள்ளது.
  • “ராஸ்பெர்ரி ரம் கடல்” என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கிறார்கள்.

பிரபஞ்சத்தின் மிகப்பெரும் மதுக்கடல் சாஜிட்டாரியஸ் பி நட்சத்திரம் அருகே கண்டுபிடிக்கபட்டுள்ளது.

அதை விஞ்ஞானிகள் "ராஸ்பெர்ரி ரம் கடல்" என அழைக்கிறார்கள்.

"எங்களை வெச்சு காமடி, கீமடி பண்ணலையே" என மதுப்பிரியர்கள் எல்லாம் டென்சனாக வேண்டாம். செய்தி உண்மைதான்

1970க்களில் ரேடியோ டெலெஸ்கோப்பை வைத்து சாஜிட்டெரியஸ் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள்.

அப்போது வந்த ரேடியோ அலைகளை வைத்து ஆராய்கையில், சாஜிட்டரியஸ் நட்சத்திரம் அருகே மிகப்பெரும் மேககூட்டம் ஒன்று (Sagittarius-B Cloud) இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

இதன் நிறை சூரியனை விட 30 லட்சம் மடங்கு பெரியது. இதன் நீளம் மட்டும் 390 ஒளியாண்டுகள்.

சூரியனை விட 1 கோடி மடங்கு அதிக பிரகாசம் தரும் வெளிச்சத்தை தருகிறது இம்மேகம்.

இந்த மேகம் முழுக்க பல்வேறு வகை நீராவிகள், வாயுக்கள், திரவங்கள் உள்ளன. இதிலிருந்தே பல நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. விண்வெளியில் கொடும் குளிர் இருப்பதாலும் , இதனுள்ளேயே நட்சத்திரங்கள் இருப்பதால் வெப்பம் இருப்பதாலும், வாயு, நீர், பனி என பல்வேறு வடிவங்களில் இதனுள் திரவங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது ஆல்கஹால்.

குறிப்பாக எத்தனால், மெதனால் மற்றும் வினைல் ஆல்கஹால் ஆகியவை மிகப்பெரும் அளவில் இந்த மேகத்தில் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது. பூமியில் உள்ள கடல்களை எல்லாம் சேர்த்தாலும், நிகராகாது எனும் அளவுக்கு மது விண்வெளியில் கடலாக மிதந்துகொண்டுள்ளது.

அதிலும் ஏராளமாக எஸ்டெர் (ester) எனும் கெமிக்கலும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. எஸ்டெரால் தான் ராஸ்ப்பெர்ரி பழங்களுக்கு அந்த நிறமும், வாசமும் வருவதால், இக்கடலை "ராஸ்பெர்ரி ரம் கடல்" என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கிறார்கள்.

பாறை கிரகங்களில் மட்டுமே தான் உயிர்கள் உருவாகவேண்டுமா என்ன? மிதக்கும் மேகங்களிலும் உருவாகலாம். அங்கே இருக்கும் மிதக்கும் சமுத்திரங்களில் இதமான தட்பவெப்பத்தில், அமினோ அமிலங்கள் கூடி, கடல்வாழ் உயிரினங்கள் ஏன் உருவாகி இருக்ககூடாது?

"அதெல்லாம் கிடக்கட்டும்..விண்வெளியில் மிகப்பெரும் ராஸ்ப்பெர்ரி ரம் சமுத்திரமே இருக்கு, தண்ணி இருக்கு, ஐஸும் இருக்குங்கறீங்க. பூமியில் இப்படி தரமில்லாத சரக்கை படைத்துவிட்டு, விண்வெளியில் இப்படி யாருமே இல்லாத இடத்தில் யாருக்கு இத்தனை சரக்கை மிக்ஸிங் பண்றான் ஆண்டவன்?

ஆண்டவனப் பாக்கணும்

அவனுக்கும் ஊத்தணும்

அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா

இனியும் எதுக்கு பொறுத்து இருக்கணும்? எடுங்க விண்கலத்தை. கிளம்புங்க சாஜிட்டெரியஸ் பி2 மேகத்துக்கு" என மதுப்பிரியர்கள் சொல்கிறார்கள்.

-நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News