- ஒரே வழி தியானித்து இருப்பதுதான்.
- ஆத்மாவை இன்னமும் ஆசைகளும் ஏக்கங்களும் கொண்டிருக்கிறது.
நம் உடலோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம். நம் உடலே நாம் என்று நினைக்கிறோம். மறந்து விடாதே. மனம் கூட உடலின் ஒரு பகுதி தான். சூட்சமமான கண்ணுக்கு தெரியாத பகுதி.
நம்மை உடல், மனம் என்ற இயக்கத்தின் பாற்பட்டு அடையாளப்படுத்திக் கொண்டால் இந்த அடையாளம் செத்துவிடத்தான் போகிறது. ஆனால் நமக்குள் சாகாத ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிந்து கொள்ளும் ஒரே வழி தியானித்து இருப்பதுதான். ஒரு சாட்சியாக இருப்பது தான். உன் உடலை கவனித்து பார்ப்பதில் ஆரம்பி. மனதை கவனி. அதில் ஈடுபட்டு விடாதே. தள்ளி நிற்பவனாக, தூரத்தில் இருப்பவனாக, அமைதியாக கவனமாக இருந்து விடு.
தியானத்தில் "தான்" என்ற அடையாளம் கழிந்து விடுகிறது. செத்துப் போய்விடுகிறது. மறைந்து போய் விடுகிறது. அப்படி மறைந்து விடும் போது உன்னை "தான்" என்ற உணர்வின்றி நீ பார்க்க முடியும். அப்போது உனக்கு மரணமில்லை.
நித்திய உலகுக்கு உரியது ஆத்மா. எனவே சாக முடியாதது. இறைவனின் உலகைச் சார்ந்தது. அதுவே ஜீவிதம். அதுவே உயிர். பிறகு உயிர் எப்படி சாக முடியும்?
உடலும் ஆத்மாவின் இணைப்பும் துண்டித்து போகிறது. ஆத்மா உடலில் இருந்து பிடுங்கி எடுக்கப்படுகிறது. மரணம் என்பது அவ்வளவு தான். அதாவது நாம் மரணம் என்று எதை சொல்கிறோமோ அது அவ்வளவுதான். உடல் திரும்ப ஜடத்துக்கு போய்விடுகிறது. மண்ணுக்கு போய் சேர்ந்துவிடுகிறது.
ஆத்மாவை இன்னமும் ஆசைகளும் ஏக்கங்களும் கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு கருப்பையை நாடுகிறது. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் தேடுகிறது. அல்லது ஆசைகள் எல்லாம் கழிந்து விட்டன என்றால், ஏக்கங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன என்றால் உடலெடுத்து வரும் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது. அப்போது ஆத்மா நித்ய பிரக்ஞைக்குள் நுழைந்து விடுகிறது.
-ஓஷோ