கதம்பம்

எலும்பை பாதிக்கும் உணவுகள்

Published On 2024-09-13 11:15 GMT   |   Update On 2024-09-13 11:15 GMT
  • எலும்புகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • அதிக அளவில் சர்க்கரை மற்றும் இனிப்புகளை சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு நிச்சயம் நல்லதல்ல.

நமது உடலில் உள்ள எலும்புகளை பலவீனமாகுக்கும் நான்கு முக்கியமான உணவு வகைகள்....

சோடா பானங்கள்:

செயற்கை குளிர் பானங்கள் மற்றும் சோடா சேர்த்த பானங்களை அதிகமாக சாப்பிடுவது, எலும்புகளை சல்லடை போலாக்கிவிடும். இவற்றிலும் அதிக அளவு பாஸ்பரஸ் உள்ளது. இது உடல் கால்சியம் சத்தை உறிஞ்சும் ஆற்றலை பாதிக்கிறது. இதனால் எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் சத்து உடலுக்கு கிடைக்காமல் போகிறது.

உப்பு:

உப்பு அதிகம் உட்கொள்வதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு தேய்ந்து உறுதி இழந்து மெலிந்துவிடும் ஆபத்து எனப்படுகிறது. இதற்குக் காரணம் உப்பில் இருக்கும் சோடியம்.

அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள்:

அதிக அளவில் சர்க்கரை மற்றும் இனிப்புகளை சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு நிச்சயம் நல்லதல்ல. காரணம், அதிக சர்க்கரையும் எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்துவிடும். அதனால் எலும்புகள் பலவீனமடையும். இதனால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் வலி, கை கால் முதுகு வலி, மூட்டு வலி போன்றவை தொடர்ச்சியாக இருக்கிறது.

டிரான்ஸ் கொழுப்பு (trans fat):

பதப்படுத்தப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், கால்சியம், பாஸ்பரஸ் சமநிலை குறைந்து, எலும்புகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவ்வகைக் கொழுப்பு, பேக்கரி உணவுகள், அனைத்து வகை துரித உணவுகளில் காணப்படுகிறது. இவ்வகை உணவுகளை முழுவதும் தவிர்க்க முடியாவிட்டாலும், எப்போதாவது மட்டும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

மதுபானம், புகை:

ஆல்கஹால் கல்லீரலுக்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கு எதிரி தான். இதுவும் உடலில் இருந்து கால்சியம் சத்தை உறிஞ்சுவதோடு, உட்கிரகித்தலையும் தடுக்கிறது.

அதேபோல், புகையில் இருக்கும் நிகோடினும், நுரையீரல் மட்டுமல்லாமல், எலும்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும், ஆக்சிஜன் அளவையும் குறைத்துவிடும். இது எலும்பு பலவீனம் மட்டுமல்லாமல், எலும்பு முறிவு நிலையையும் ஏற்படுத்துகிறது.

எனவே, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, உறுதியைக் குறைத்து, சல்லாடையாய் துளைக்கும் மேற்கண்ட நான்கு வகைக்குள் அடங்கும் உணவுகளத் தவிர்ப்பது நல்லது.

அதே சமயம், எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, அன்றாட உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் நிறைந்த கீரைகள், பந்தல் மற்றும் நாட்டுக் காய்கள், முழு தானியங்கள், எள், விதைகள், கொட்டைகள், பால் உணவுகளை சேர்ப்பது அவசியம்.

-வண்டார்குழலி ராஜசேகர்

Tags:    

Similar News