கதம்பம்

கவியரசின் கைவண்ணம்!

Published On 2024-09-15 11:15 GMT   |   Update On 2024-09-15 11:15 GMT
  • சில பாடல்களில் அவருடைய வழக்கமான குறும்புகளும் வெளிப்பட்டிருக்கின்றன.
  • கண்ணதாசன் மிக அழகாகத் திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்.

கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது..

கம்பராமாயணத்தில் தாடகையை வென்று ராமன் விஸ்வாமித்ர முனிவரோடு திரும்பி வருகிற போது அவன் கால் பட்டு அகலிகை பெண்ணாகிற தருணத்தில் ,

" இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

இனியிந்த வுலகுக்கெல்லாம்

உய்வண்ணம் அன்றி மற்றோர்

துயர் வண்ணம் உறுவதுண்டோ

மைவண்ணத்து அரக்கி போரில்

மழைவண்ணத்து அண்ணலே

உன் கை வண்ணம் அங்கு கண்டேன்

கால் வண்ணம் இங்கு கண்டேன் "

என்கிற பாடல் வரும்..

'வண்ணம்' என்கிற ஒரே சொல் விதவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.. கண்ணதாசன் இதே உத்தியை திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..

" பால்வண்ணம் பருவம் கண்டு

வேல்வண்ணம் விழிகள் கண்டு

மான்வண்ணம் நான்கண்டுபாடுகிறேன்

கண்வண்ணம் அங்கே கண்டேன்

கைவண்ணம் இங்கே கண்டேன்

பெண்வண்ணம் நோய்

கொண்டு வாடுகிறேன்"

" யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்" என்கிற குறளை

" உன்னை நான் பார்த்த போது

மண்ணை நீ பார்க்கிறாயே

மண்ணை நான் பார்த்த போது

என்னை நீ பார்க்கிறாயே"

என்று எளிமைப்படுத்திப் பாடியிருப்பார்..

சில பாடல்களில் அவருடைய வழக்கமான குறும்புகளும் வெளிப்பட்டிருக்கின்றன.

"ஆட்டுவித்தால் ஆரொருவருவர் ஆடாதாரே

ஓட்டுவித்தால் ஆராரொருவரா ஓடாதாரே"

என்பது தேவாரத்தில் வருகிற அப்பர் பாடல்.

இவர் 'கண்ண' தாசனல்லவா ? தேவாரப் பாடலின் வரிகளைத் தூக்கிப் போய்,

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

கண்ணா..

ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே

கண்ணா"

என்று வைணவத்திற்கு மதம் மாற்றியிருப்பார்..

பெரிய புராணத்தின் 'திருநீலகண்டர் புராணத்தில்' கணவன் புறமாதரோடு உறவு கொண்டதால் வெகுண்ட நீலகண்டரின் மனைவி 'எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்' என்று சிவன் மீது ஆணையிட்டு அவர் தொடக் கூடாதென்று கட்டளையிடுவார்..

இந்தக் கருத்தை கண்ணதாசன் மிக அழகாகத் திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..சிவாஜியை மனைவி ஜெயலலிதா 'தொடக்கூடாது' என்று சொல்லி விடுவார்..அப்போது பாடுகிற பாடலில்தான் பெரிய புராணம் இணைந்து கொள்ளும்..

" நிலவைப் பார்த்து வானம் சொன்னது

என்னைத் தொடாதே..

நிழலைப் பார்த்து பூமி சொன்னது

என்னைத் தொடாதே.. "

என்று தொடங்கி,

" புதியதல்லவே தீண்டாமை என்பது

புதுமையல்லவே அதை நீயும்சொன்னது

சொன்ன வார்த்தையும் இரவல் தானது

திருநீலகண்டரின் மனைவி சொன்னது" என்கிற வரிகள் வருகிற போது புராணம் எட்டிப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அதை வேறொரு பரிமாணத்தில் மாற்றியிருப்பார்..

சந்தேகமே இல்லாமல் கண்ணதாசன் தமிழ் சினிமாவிற்குள் இயங்கிய பெரும் மேதை..!

-மானசீகன்

Tags:    

Similar News