கதம்பம்

இது தான் தமிழ்நாட்டின் பெருமை!

Published On 2024-09-16 11:45 GMT   |   Update On 2024-09-16 11:45 GMT
  • சோழநாட்டில் தான் சிவத் தலங்கள், முருகன் திருத்தலங்கள், திவ்விய தேசங்கள் நிறைந்துள்ளன.
  • ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று இது.

"வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க

சோழவளநாடு சோறு உடைத்து, பூழியர்கோன்

தென்னாடு முத்து உடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சன்றோர் உடைத்து".

சேர, சோழ, பாண்டிய மற்றும் தொண்டை நாடுகளின் சிறப்புக் குறித்து, ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று இது.

சேரநாடு யானைகள் மிகுந்து இருப்பது..

மேன்மை உடைய சோழவளநாடு நெல்வளத்தை உடையது..

பாண்டியனது தென்னாடு முத்து விளையும் சிறப்பை உடையது..

நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டு உள்ள தொண்டை நாடு சான்றோரை உடையது என்பது இப்பாடலின் வெளிப்படையான பொருள்.

ஔவைப் பிராட்டி, நம்மை உய்த்து உணரச் செய்த பொருள் ஒன்று இப்பாட்டில் உள்ளது. அதனைக் காண்போம்:

தொண்டை நாட்டில் வாழும் சான்றோர்களைக் குறித்துப் பாடிய ஔவையார், மற்ற நாடுகளில் உள்ள விளைபொருள்கைக் குறித்துப் பாடினார் என்பது ஏற்புடைதாக இல்லை என்பார் சான்றோர்!

"தொண்டை நாடு சான்றோர்களை உடையது" என்று வெளிப்படையாகச் சொன்னதை வைத்து, மற்றதை உய்த்து உணரச் செய்தார்.

"மலைநாடு" என்பது சேரநாடு எனப்படும். இப்போதைய கேரளம். இது வேழம் உடைத்து.

வேழம் என்றால் யானை மட்டும் அல்ல, கரும்பு என்றும், இசை என்றும் பொருள் உண்டு.

எனவே இனிமையான மக்களை உடையது சேரநாடு என்று பொருள் கொள்ளலாம்.

"மேன்மை பொருந்திய சோழநாடு சோறு உடைத்து."

சோழநாட்டில் நெல் நிறைய விளைவதால், சோறு உடையது என்பது அல்லாமல், அதற்கு ஒரு உள்ளுறை பொருளும் உள்ளது என்று அறிதல் வேண்டும்.

"சோறு" என்ற சொல்லுக்கு, "வீட்டின்பம்", "மோட்சம்" "முத்தி" என்றும் பொருள் உண்டு.

சோழநாட்டில் தான் சிவத் தலங்கள், முருகன் திருத்தலங்கள், திவ்விய தேசங்கள் நிறைந்துள்ளன.

பாடல் பெற்ற சிவத்தலங்கள் 274-ல், 190 திருத்தலங்கள் சோழநாட்டில் தான் உள்ளன.

பெருஞ்சிறப்பாக, சைவர்களுக்குக் கோவில் எனப்படும் "சிதம்பரம்" உள்ளது.

வைணவர்களுக்குக் கோவில் எனப்படும் "திருவரங்கம்" உள்ளது.

தில்லையை வணங்க முத்தி..

திருவாரூரில் பிறக்க முத்தி..

என்பார்கள் சான்றோர்.

சோழ நாட்டின் பெருமைக்கு இன்னும் என்ன வேண்டும்?.

இத்தகைய சோழநாட்டில் வாழ்பவருக்கு வீட்டின்பம் அல்லது மோட்சம் உறுதி என்பதால், "சோழநாடு சோறு உடைத்து" எனப்பட்டது என்பர் சான்றோர் .

"பாண்டி நாடு முத்து உடைத்து".

முத்து என்னும் சொல்லுக்கு, "வெளிப்படுவது" "விடுபடுவது" என்றும் பொருள் உண்டு.

சிப்பியில் இருந்து வெளிப்படுவது முத்து எனப்பட்டது.

"முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள்.

பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும்.

அந்த சீர்மிகு பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த மணிவாசகர் இறையருளால் முத்தி நிலையைப் பெற்றார்.

எனவே, பாண்டி நாடு முத்து உடைத்து எனப்பட்டது.

போற்றுவோம் தமிழையும் - தமிழ் நாட்டையும்!

-பி.டி அரசு

Tags:    

Similar News