- வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.
- எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது.
கலைவாணர் அவருடைய கடைசி கால கட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக தகவல் கொடுத்தார்.
இது குறித்து எம்.ஜி.ஆர் கூறுகையில் "யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்திற்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன். பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன்.
அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போறாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்தி தான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னா மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம் தான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.
என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது! எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது." என்றார்.
-சந்திரன் வீராசாமி