கதம்பம்

அந்த சக்தி தலைவருக்குத் தான் உண்டு..!

Published On 2024-10-10 11:15 GMT   |   Update On 2024-10-10 11:16 GMT
  • வாரியார் சுவாமிகள் நிதானமாக, “அப்படியா…. சரி, என் தலைவர் இருக்கட்டும்.
  • எல்லோரும் தலைவருக்கு மாலை வாங்கிப் போடுவதற்காக, போட்டிபோட்டு வாங்கிட்டு போயிடுவாங்க….” என்றார்.

ஒருமுறை மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் திருநாவுக்கரசரின் பெருமை பற்றி சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார் வாரியார் சுவாமிகள்.

நாவுக்கரசர் புகழ் ஓங்கியதை பொறுக்காத சமணர்கள் மன்னர் மகேந்திரவர்ம பல்லவனிடம், நாவுக்கரசரைப் பற்றி, பொய்யான செய்திகள் சொல்லி, அவரை கொல்ல வேண்டுமென்னு தூபம் போட்டனர்.

திருநாவுக்கரசரை கல்தூணில் சங்கிலியால் பிணைத்து, நடுக்கடலில் கொண்டபோய் மூழ்கடிக்குமாறு காவலர்களை ஏவினான் அரசன். அவர்களும் அப்படியே செய்தார்கள்.

"சொற்றுணை வேதியன் சோதியானவன்……"

என்று பதிகம் பாட அவர் பக்தியின் சக்தியால் இரும்பு சங்கிலிகள் மலர் சரங்களாக மாறின. கல்தூண் கனமற்ற தக்கையாகி, பின் படகாக உருவெடுக்க, அதில்ஏறி கரை ஒதுங்கினார். என்னே என் திருநாவுக்கரசரின் பக்தி! என்று வாரியார் சுவாமிகள் மனம் மகிழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கையில்,

நாத்திக இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்து,"சரி உங்க தலைவர் மாதிரி, உங்களையும் கல்லோடு சேர்த்து கட்டி, இந்த கோவில் பொற்றாமரை குளத்திலே தூக்கி போட்டுடலாம்.. உங்க தலைவர், திருநாவுக்கரசர் மாதிரி அவர் தொண்டர் நீங்க தப்பித்து வர்றீங்களான்னு பார்க்கலாமா….?" என்று கேட்க, சபையோர் திடுக்கிட்டுப் போயினர்.

ஆனால், வாரியார் சுவாமிகள் நிதானமாக, "அப்படியா…. சரி, என் தலைவர் இருக்கட்டும்;

உன் தலைவர் யாரு? அவர் மதுரைக்கு வந்திருக்காரா…. அவர் வந்தா, அவருக்கு நீ என்ன செய்வே?" என்று கேட்டார்.

அந்த நாத்திக அன்பர், "எங்க தலைவர் மதுரைக்கு வந்தால் அவருக்கு மாலை மரியாதை செய்வதுதான் என் முதல் வேலை. அன்றைக்கு பூக்கடையிலே மாலையே கிடைக்காது; எல்லோரும் தலைவருக்கு மாலை வாங்கிப் போடுவதற்காக, போட்டிபோட்டு வாங்கிட்டு போயிடுவாங்க…." என்றார்.

"தலைவருக்கு மாலை மரியாதை செய்கின்றனரே…. அவர் தொண்டனான உனக்கு யாரும் மாலை மரியாதை செய்ய மாட்டார்களா?" என்று கேட்டார் வாரியார்.

"அதெப்படி…..? தலைவருக்குத்தான் மாலை மரியாதை செய்வாங்க; அதெல்லாம் தொண்டனுக்கு எப்படி கிடைக்கும்….?" என்றார் அந்த அன்பர்.

உடனே வாரியார், "எப்படி மாலை மரியாதையெல்லாம் உன் தலைவரைத் தவிர, தொண்டரான உனக்கில்லையோ, அதுபோலத்தான் அற்புத சக்தி, அருமை, பெருமையெல்லாம் என் தலைவர் திருநாவுக்கரசருக்கு மட்டும்தான் உண்டு; அவர் தொண்டனான எனக்கு அந்த சக்தி கிடையாது……" என்று சொல்லவும், அந்த அன்பர் வாயடைத்துப்போய் உட்கார்ந்து விட்டார்.

-செல்வகுமார்

Tags:    

Similar News