- ‘திண்டாட்டம்’ என்ற சொல் நம்மிடையே பரவலாகப் புழக்கத்திலிருக்கும் ஒன்றாகும்.
- ஒன்றன் பற்றாக்குறையால் ஏற்படும் துன்பத்தைக் குறிக்க நாம் இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
"நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது."
"ஏழை மக்கள் சோற்றுக்குத் திண்டாடுகிறார்கள்."
இவ்வாறு, 'திண்டாட்டம்' என்ற சொல் நம்மிடையே பரவலாகப் புழக்கத்திலிருக்கும் ஒன்றாகும்.
ஒன்றன் பற்றாக்குறையால் ஏற்படும் துன்பத்தைக் குறிக்க நாம் இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
இதன் பின்னணி என்ன?
அந்நாளில் ஊர்களிலுள்ள சந்திகளிலும் பொது இடங்களிலும் திண்டுகள் இருப்பதுண்டு; திண்டு என்பது சிறு திண்ணையைக் குறிப்பது. அந்தத் திண்டுகளில் குறச்சிறுமியர் சோறு வேண்டிக் கூத்தாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு கூத்தாடுகின்ற சிறுமியர்க்கு இரக்கமுள்ள மக்கள் உணவளித்திருக்கிறார்கள்.
எனவேதான் இவர்களைப் போல ஒருவன் சோறில்லாமல் இடர்ப்படும்போது, "அவன் சோற்றுக்குத் திண்டாடுகிறான்" என்று கூறுகின்ற வழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் நீட்சியாகத்தான் வேலைவாய்ப்பின்மையையும், ஈதொத்த பிற இடர்ப்பாடுகளையும் குறிக்க நாம் திண்டாட்டம் என்ற சொல்லை இன்றும் பயன்படுத்திவருகிறோம்.
இதுபோலவே 'தாளம் போடுதல்', 'சிங்கி அடித்தல்' போன்றவையும் வறுமையால் ஏற்படும் இழிநிலையைக் குறிக்க நம்மிடையே பயன்பாட்டிலிருக்கும் வேறுசில சொற்கள்.
ஒன்றைக் கவனித்தீர்களா?
ஆடுதல், பாடுதல், இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற உயர்ந்த கலைகள்கூட அவற்றிற்கு மதிப்பளிக்கக்கூடிய இடங்களில் நிகழ்த்தப்பெறவில்லையெனில் மரியாதை இழந்து இழிநிலை அடைந்துவிடுகின்றன.
இருக்கும் இடத்தில் இருந்தால்தான் எல்லாருக்கும்/எல்லாவற்றுக்கும் மதிப்பு; இல்லையேல் அவமதிப்பே!
-மேகலா இராமமூர்த்தி