- போன தீபாவளிக்கு அஞ்சு வட்டிக்கு வாங்கிய ஐயாயிரம் பத்தாயிரமாய் வளர்ந்து.
- கடன்காரர்களுக்கு காரணம் சொல்லி காரணம் சொல்லியே அம்சமாய் இருந்த மனைவி இன்று- அரைக் கிழவியாகி_நிற்பாள் ....!
அரைப்பாவாடையுடன்
ஓடியாடிய குழந்தை
திடுமென வளர்ந்து
ஆளாகி நிற்பதுபோல்
போன தீபாவளிக்கு
அஞ்சு வட்டிக்கு
வாங்கிய ஐயாயிரம்
பத்தாயிரமாய் வளர்ந்து-
பயமுறுத்தும்....!
கடன்காரர்களுக்கு
காரணம் சொல்லி
காரணம் சொல்லியே
அம்சமாய் இருந்த
மனைவி இன்று-
அரைக் கிழவியாகி _
நிற்பாள் ....!
யமக் கிங்கரர்களாய்
கனவிலும் வந்து
பயமுறுத்தும்
பால்காரன்
பேப்பர்காரன்
கடைக்காரன்
கூடவே.....
கைமாத்து கொடுத்த-
கடன்காரன்.........!
கடனாளியால்
கதவடைத்து
உள்ளிருந்தாலும்
கட்டாயம் வந்து விடுகிறது
மாதத்தில் இருமுறையேனும்
உறவுக்காரர் திருமணம்
இரண்டும்...
ஊர்த்திருவிழாவுக்கு
நன்கொடைகேட்கும்
அழைப்பிதழ்-
ஒன்றும்........!
வலிகளும் இரணங்களும்
வலைவிரித்துக்
காத்திருந்தாலும்
தீபாவளி என்னும்
ஒற்றைநாளில்
மலர்ந்து விடுகிறது
உலர்ந்து கிடந்த-
வாழ்க்கை.......!
அசராமல் மறுபடியும்
பத்துவட்டிக்கு
கடன்வாங்கி
பண்டிகையை
எதிர்நோக்குகையில்
மூத்தபெண்
ஆளான சேதியோடு
முறைசெய்ய வரச்சொல்லி
அழைப்பு வரும்-
தங்கையிடமிருந்து....!
குறிப்பிட்ட தேதிக்குள்
தவணைத்தொகை
கட்ட சொல்லி
கோர்ட்டிலிருந்து
நோட்டிஸ் வரும்..!
கைமாத்து
கொடுத்த நண்பன்
கதவுக்கு
வெளியே நிற்பான்..!
மறுநாள் முதல்
தொடரப்போகும்
மாயப்பிசாசுகளை
மறந்து..
ஒருநாளாவது
இருப்போமே-
இன்பமுடன்......!
-அழ. இரஜினிகாந்தன்