கதம்பம்

உங்களுடைய லிப்ஸ்டிக் சைவமா.. அசைவமா..

Published On 2023-05-26 07:50 GMT   |   Update On 2023-05-26 07:50 GMT
  • துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.
  • உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது.

லிப்ஸ்டிக், நகப்பாலீஷ், முகத்திற்குப் பூசப்படும் அழகு சாதன பொருட்கள், மருந்துகள், மாத்திரைகள், டானிக்குகள், மேல் பூச்சு மருந்துகள்... இப்படி அனைத்தையும், அனைத்திலும் சிவப்பு நிறத்தை பார்க்கும் நாம், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளவதில்லை.

மேற்கூறிய அனைத்துப் பொருட்களிலும் சிவப்பு நிறத்திற்காகக் கலக்கப்படும் நிறமி ஒரு வகையான பூச்சிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

கோச்சினீல் பக் என்னும் ஒரு வகையான ஒட்டுண்ணி பூச்சியில்தான் இந்த சிவப்பு நிறமி இருக்கிறது. காக்ட்ஸ் வகை (கள்ளி) செடிகளில் வெள்ளை நிற கூட்டுடன் வாழும் இப்பூச்சிகளை கசக்கினால், கைகளில் சிவப்பு நிறம் கிடைக்கும். உலர வைத்த இப்பூச்சிகளை அலுமினியம் அல்லது கால்சியம் உப்புடன் சேர்த்துப் பின் பக்குவப்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு நிற மைக்கு "கார்மைன்" அல்லது "காக்கினியல் மை" என்று பெயர் வைத்துள்ளார்கள்.

துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருட்களானாலும் அதனுடைய மேல் அட்டையில் (லேபிள்) E 120, Natural Red 4, Carmine, Cochineal, Carminic acid என்று ஏதாவது ஒன்றை கண்டிப்பாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

ஒருவேளை இந்த சிவப்பு நிறமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருந்தால் E 124 என்று குறிப்பிடவேண்டும்.


உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் இந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது. ஆனால், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே ஜெல்லி மிட்டாய்கள், கேண்டீஸ், சாக்லேட், போன்றவை அதிக அளவில் சிவப்பு நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.

பதப்படுத்தப்பட்ட மாமிசம், குளிர்பானங்கள், பழ ரசங்கள், ஆற்றல் தரும் பானங்கள், உணவுப் பொடிகள், இனிப்பு தயிர், பால் பொருட்கள், ஐஸ்கிரீம், சூயிங்கம், சாக்லேட், கற்கண்டு வகை இனிப்புகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட பழங்கள், உலர் சூப் பொடி, கெச்சப், மதுபானங்கள்...... என்று இவை அனைத்திலும் இந்த நிறம் இருக்கும்.

ஒருவேளை.... அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கும்போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அது இந்த பூச்சியினாலேயே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-வண்டார் குழலி

Tags:    

Similar News