கதம்பம்

வாரியாரின் சாமர்த்தியம்

Published On 2022-08-25 10:39 GMT   |   Update On 2022-08-25 10:39 GMT
  • திருவாரூரில் பெரிய கோவிலில் மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தினார் திருமுருக கிருபானந்த வாரியார்.
  • யாரை எப்படி எந்த இடத்தில் பாராட்டினால் அவர்கள் நிறைவடைவார்கள் என்று கண்டறிந்து வைத்திருக்கும் அனுபவம் வாரியாருக்கு உண்டு.

எத்தனையோ பேர் கதைசொல்லிகளாக இருக்கிறார்கள் என்றாலும் திருமுருக கிருபானந்த வாரியார் போன்று மக்கள் உள்ளங்கவர்ந்தவர் இன்னொருவர் தெரியவில்லை. இசை, இலக்கியம், புராணங்கள் என எல்லாவற்றிலும் நிறைஞானம் அவருக்கு வாய்த்திருந்தது. எல்லாவற்றையும் மிஞ்சி அவருடைய நகைச்சுவை, பேச்சுக்கு மெருகூட்டியது எனலாம்.

திருவாரூரில் பெரிய கோவிலில் மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மு.ரா.சன்ஸ் என்ற துணிக்கடை அன்று திருவாரூரில் பிரபலம். அவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் உபயதாரர்.

வாரியார் கதைசொல்ல ஆரம்பித்த சிறிது நேரத்தில் விழா ஏற்பாட்டாளர் அவரிடம் சென்று "சாமி இன்று மு.ரா.சன்ஸ் உபயம், பெரியமுதலாளி வந்திருக்கிறார். அவங்களைப் பாராட்டி ரெண்டு வார்த்தை சொல்லுங்க" என்றார்.

"சரி, சரி போய்யா" என்ற வாரியார் அதுபற்றி எதுவும் சொல்லாமல் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

அமைப்பாளர் மறுபடியும் வாரியாரிடம் சென்று, 'சாமி அவரு போயிருவாரு.. இப்பவே கொஞ்சம் பாராட்டுங்க என்றார்.

வாரியார், 'கதை சொல்லும்போது இடைஞ்சல் பண்ணாதே போய்யா' என்று சிடுசிடுத்தார்.

பிறகு, கதையில் திரௌபதியை துச்சாதனன் சபையில் அவமானப்படுத்தும் இடம் வந்தபோது, துச்சாதனன் இழுக்க இழுக்க பாஞ்சாலி புடவை வளர்ந்த வண்ணமாகவே இருந்தது. அதை அன்று வாரியார் இவ்வாறு கூறினார்.

"கலர் கலரா சேலை வந்தது. பச்சையில மஞ்ச பார்டர் மயில் முந்தி, அரக்கு கலர் பச்சை பார்டர், கூஜா முந்தி.. இப்படிப் பலப்பல கலரிலே வந்ததும் துரியோதனன் நினைச்சான், அட இது மாதிரி கிடைச்சா பானுமதிக்கு வாங்கித் தரலாமேன்னு.. துச்சாதனன் இழுக்கறதை மறந்து சேலையை ரசிக்க ஆரம்பிச்சிட்டான்.

இவனுக கிடக்கானுங்க.. கண்ண பரமாத்துமாவே அசந்துட்டாரு போங்க. பாமாவுக்கு ஒன்னு ருக்மணிக்கு ஒன்னு வாங்கித் குடுத்துட வேண்டியதுதான்னு நினைச்சு, புடவையை அனுப்புற தேவதைகிட்ட கேக்குறாரு, 'சேலையெல்லாம் எங்கேருந்து வருது'?

தேவதை சொல்லுது 'சுவாமி எல்லாம் மு.ரா.சன்ஸ்லேருந்து வருது'.. இதை வாரியார் சொன்னவுடன், கூட்டம் கலகலத்தது, சிரிப்பும் கைதட்டலும். மு.ரா.சன்ஸ் முதலாளி வாழ்நாளில் அப்படி ஒரு மகிழ்ச்சியை அடைந்ததே இல்லை.

யாரை எப்படி எந்த இடத்தில் பாராட்டினால் அவர்கள் நிறைவடைவார்கள் என்று கண்டறிந்து வைத்திருக்கும் அனுபவம் வாரியாருக்கு உண்டு.

- இரா. சண்முகவடிவேல்

Tags:    

Similar News