கதம்பம்

ஹால்மார்க் என்றால் என்ன?

Published On 2023-04-25 11:02 GMT   |   Update On 2023-04-25 11:02 GMT
  • ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
  • ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது.

ஹால்மார்க் என்பது விலையுயர்ந்த உலோகப் பொருட்களில், அந்த விலையுயர்ந்த உலோகப் பொருள் சேர்ந்துள்ள அளவின் துல்லிய மதிப்பு மற்றும் அங்கீகார பதிவாகும்.

தங்கத்தில் கலப்படம் செய்யாமல் விற்க வேண்டும் என்பதற்காக சுமார் 800 வருடங்களுக்கு முன் பிரிட்டனில் தான் முதல் முதலாக ஹால்மார்க் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய நகை வியாபாரிகள் சில உலோகங்களை தங்கத்துடன் எந்த அளவு சேர்கிறார்கள்? என்பதை எல்லோருக்கும் தெரியும்படி ஒரு ஹாலில் வைத்து நகை செய்தனர். ஹாலில் வைத்து தங்க நகைகளை செய்து அதன்பின் வியாபாரம் செய்வதால் தான் ஹால்மார்க் என்ற பெயர் இதற்கு வந்தது.

இந்தியாவில், ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ள இந்த கழகத்தின் அலுவலகம் தான் ஹால்மார்க் என்ற சோதனையை செய்கிறது.

ஹால்மார்க் முத்திரை இடுவதற்கு ஐந்து பிரிவுகளை இந்திய தர நிர்ணய கழகம் நிர்ணயித்துள்ளது.

1. பிஐஎஸ் தர நிர்ணய கழகத்தின் சின்னம்.

2. தங்கத்தின் தன்மை அல்லது மாற்று. உதாரணமாக 22 காரட் தங்கத்தில் 916 முத்திரையும், 21 காரட் தங்கத்தில் 875 என்ற முத்திரையும் இடப்பட்டிருக்கும்.

3. ஹால்மார்க் செய்யப்படும் மையத்தின் சின்னம்.

4. நகைகள் செய்யப்பட்ட வருடம் ரகசியமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

5. பிஐஎஸ் அங்கீகாரம் வணிகரின் சின்னம்.

ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் மேற்கண்ட ஐந்து முத்திரைகளும் கண்டிப்பாக இருக்கும்.

சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ என்ற தங்க நகை ஏற்றுமதி செய்யும் 164 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்திய அரசு பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதியும் உள்ளது.

-அருண் நாகலிங்கம்

Tags:    

Similar News