கதம்பம்

தமிழரின் அடையாளம் ராஜராஜ சோழன்

Published On 2022-11-03 10:24 GMT   |   Update On 2022-11-03 10:24 GMT
  • சிவன் மேல் தீராத பற்றுகொண்ட ராஜராஜன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும் திட்டமிட்டான்.
  • ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்.

கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது.

அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன்.

ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.

அந்த ராஜராஜன் இதில்தான் உருவானான். அக்காலம் பாண்டியர், சிங்களர் இன்னும் சாளுக்கிய மன்னர்கள் என பல அச்சுறுத்தல் இருந்த நேரம் ராஜராஜன் முடிசூடினான்.

அவனிடம் அன்றே எல்லா படையும் இருந்தது, கப்பல் படை இருந்தது, நாவாய் படை என்று அதற்கு பெயர், இன்று உலகம் கொண்டாடும் நேவி எனும் வார்த்தை அதிலிருந்தே வந்தது.

சோழநாட்டை காக்கவும், சைவ சமயத்தை பரப்பவும் பெரும் போர்களை அவன் தொடுத்தான். பாண்டிய நாடு முதல் சேரநாடு வரை அவன் கட்டுபாட்டில் இருந்தது.

சேரநாட்டில் காந்தளூர்சாலை என்றொரு இடம் இருந்திருக்கின்றது. அங்கு பகைவரின் கப்பல்கள் எல்லாம் வந்திருக்கின்றன, அங்கு சென்று அந்த கடற்கலன்களை எல்லாம் அழித்திருக்கின்றான், இது அவனது மெய்கீர்த்தியில் இருக்கின்றது.

பாண்டியரும் சிங்களரும் சேர்ந்து தொடுக்கும் போர் அபாயத்தில் இருந்து தப்பிக்க பெரும் கடற்படையுடன் சிங்கள நாட்டைதாக்கி இருக்கின்றான், அநுராதாபுரம் எனும் சிங்கள நகரம் அவனால் நொறுக்கபட்டிருக்கின்றது.

வடக்கே கலிங்கம் வரை அவன் கைபற்றியிருக்கின்றான்.

ராஜராஜன் காலம் புத்த மதத்தை வீழ்த்தி சைவ மதம் செழித்த காலம், தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் சைவ மதம் வளர்த்திருக்கின்றான்.

இன்றைய இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா நாடுகள் அடங்கிய அன்றைய ஸிரி விஜயா நாட்டின் மீதும் தன் மகன் தலைமையில் பெரும் போர் புரிந்துவென்று வெற்றிகொடி நாட்டி, சைவ மதம் வளர்த்திருக்கின்றான்.

அவனது கடற்கலன்களும், அவனின் போர்முறையும் அவனுக்கு அப்படி பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கின்றன‌.

உலகில் தோல்விபெறாத அரசர்கள் வரிசையில் ராஜராஜனின் பெயரும் உண்டு, ஆனால் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர், சீசர் என வேறு வரிசை வைத்திருப்பார்கள், வைக்கட்டும்.

சிவன் மேல் தீராத பற்றுகொண்ட ராஜராஜன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும் திட்டமிட்டான்.

ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.

பல நாடுகளில் திரட்டபட்ட செல்வமும், பல மன்னர்கள் கொடுத்த வரியும், அவன் அடிமைகளாக பிடித்த எதிரி நாட்டு வீரர்களும் அதற்கு பயன்பட்டன‌.

காலத்தை வென்று நிற்கும் கற்காவியமான பெரிய கோவில் அவனால்தான் கட்டபட்டது, முழுக்க முழுக்க கல்லான் ஆன கோவில் அது.

கற்தூண்கள் உச்சியில் பாரம் இல்லையென்றால் விலகிவிடும் என்பதற்காக பெரும் கல்லை உச்சியில் நிறுத்தி , ஆலயத்தை நிலைபெற்றிருக்க செய்வதில் நிற்கினது அவனின் கட்டட கலை அறிவு.

ஆலய பாதுகாப்பும் அதுதான், எவனாவது அழிக்க முயன்றால் ஒரு தூணை தொட்டாலும் முடிந்தது விஷயம்.

அதாவது அந்நிய நாட்டு படைகள் முதலில் தாக்குவது அந்த ஆலயத்தைத்தான், காரணம் அளவுக்கு அதிகமான செல்வம் அங்குதான் சேர்ந்திருக்கும்.

அதனை எண்ணித்தான், தன் காலத்திற்கு பின்பு என்றாவது எவனாவது அதனை அபகரிக்கும் எண்ணத்தில் வந்தால் அவன் அழிந்து போகவேண்டும் என்று சில வரங்களை அவன் ஆலயத்தில் நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது.

அப்படி தன் மூச்சே அந்த ஆலயம் என வாழ்ந்திருக்கின்றான் ராஜ ராஜன்.

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், தமிழர்களின் தனிபெரும் அரசன் ராஜராஜன், தமிழர்களின் தனிபெரும் அடையாளம் அந்த கோவில்.

வரலாற்றில் பெரும் அடையாளம் மிக்கவனும், உலகின் மிக வலுவான கப்பல் படையினை முதலில் நிறுவியவனும், தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் ஆன அந்த வீர தமிழனுக்கு பிறந்தநாள் மரியாதைகளை செலுத்துவதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைகின்றான்.

-சுந்தர் நத்தமன்

Tags:    

Similar News