தஞ்சை பெரிய கோவில்- புதைந்து கிடந்த உண்மை
- 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
- ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர்.
தஞ்சை பெரியகோவிலின் பெருமை வாய்ந்த வரலாறு அதன் சுற்றுசுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தும் கூட, உள்ளூர் மக்கள் பெரிய கோவிலை ஆவணப்படுத்த தவறி விட்டார்கள். 1860-க்கு முன்னர் கோவிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையிலேயே 800 ஆண்டுகளாக இருந்து வந்தது...
1858-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தஞ்சையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பிறகு, புனித பீட்டர்ஸ் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த, ஆங்கிலேய கிருத்துவ பாதிரியார் மற்றும் தலை சிறந்த தமிழ் அறிஞருமாகிய ஜி.யூ.போப், பெரிய கோவிலை ஆவணப்படுத்துமாறு கோரப்பட்டார்.
அதன் விளைவாக தஞ்சை பெரிய கோவில், ஒரு சோழ மன்னரால் கட்டப்பட்டது என்று ஆவணப்படுத்திய முதல் நபர் அவர்தான். உள்ளூர் அறிஞர்களிடமிருந்து விசாரித்ததில் பெரிய கோயில் "காஞ்சிபுரத்து காடுவெட்டி சோழர்" என்பவரால் கட்டப்பட்டது என்பதை அறிந்து அவர்கள் சொன்னதை வைத்து வெளியிட்டார்.
பிற்காலத்தில் தான் முழு உண்மை தெரிய வந்தது... 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர். அவர்தான் பெரிய கோவிலின் பூர்வீகத்தை 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டியவர். முழு அத்தியாயமும் பெரிய கோவிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார்!
இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இதன் மூலம் தான் தமிழர்களின் பழங்கால செழிப்பும், வளமும் உலகிற்கு தெரிய வந்தது. பெரிய கோவில் பற்றி அவர் எடுத்த புகைப்படங்கள், பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.
1000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பெரிய கோவில் பூகம்பங்கள், படையெடுப்புகள், திருட்டு, சூறை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தாங்கி இன்று வரை கம்பீரமாக நிற்பது ஒரு மாபெரும் அதிசயம்.
800 ஆண்டுகள் தொடர்ச்சியாக படையெடுப்பு, சண்டை... 1279ல் பாண்டியர்கள் தஞ்சாவூரை இரண்டு முறை படையெடுத்து கைப்பற்றினர். தஞ்சாவூர் சோழர் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. 1335ல் மாலிக் கஃபூரின் படைகளால் கடும் சோதனைக்கு உட்பட்டது. 1335ல் தில்லி சுல்தான் படையெடுப்பு.. 1350 முதல் 1532வரை தேவராயாவின் விஜயநகரின் ஆதிக்கம்... 1532முதல் 1673 வரை நாயக்கர்கள் ஆட்சி.. 1674முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி.. 1855 முதல் 1947 வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி..
1772 ஆம் ஆண்டில், கோவிலின் நுழைவு கூடம் பிரெஞ்சு படைவீரர்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. 1773 முதல் 1779 வரை ஆங்கிலேய படை சிறிய கோட்டையின் வடக்கு பகுதியை தங்குமிடமாக பயன்படுத்தினர். (தற்போதைய பதிவு அலுவலகம் / சிவ கங்கா பூங்கா இருக்கும் இடம் ).
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரிய கோவில், பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும். அதன் பிறகு தான் கரும் பாசி படிந்த, கோவிலின் முகப்பு கற்கள் "சாண்ட் பிளாஸ்டிங்" முறையில் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் இளஞ்சிவப்பு கிரானைட் கல் மேலும் நன்றாக தெரிய வந்தது. இதன் காரணமாகத்தான் பெரிய கோவில் தோற்றம் பிரகாசமாக மாறியது.
1995 உலக தமிழ் மாநாட்டின் போது, திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் பெரிய கோவிலின் வெளிப்புற ஒளி விளக்குகளை வடிவமைத்தார். அது மேலும் பிரகாசம் ஊட்டியது. கடந்த 15 வருடங்களாக 5 வருடத்திற்கு ஒரு முறை ரசாயன முறையில் கோபுர சிற்பங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.
பெரிய கோவில் கட்ட உபயோகப்படுத்திய இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கிள்ளுகோட்டையின் தென்மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தற்போதைய நந்தி சிற்பம், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இது பெரம்பலூர் பச்சமலை அடிவார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
கோவிலின் மேல் உள்ள உருண்டை வடிவம் கொண்ட கலசம் போல இருக்கும் சிகரம் (கல் குவிமாடம்/ Dome) ஒரே கல்லில் வடிவமைத்தது அல்ல.. ஆறு பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட சிகரம் என்பதினை நேரில் பார்த்த ஆய்வாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.
-எஸ்.பி.அந்தோணிசாமி