கர்நாடகாவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த 7 பேரின் உடல்கள் மீட்பு
- கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது.
- இதனால் உத்தர கன்னடாவில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன.
இதற்கிடையே, உத்தர கன்னடாவில் ஏற்கனவே பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கனமழையால் அங்கு 92 வீடுகள் இடிந்தன. உத்தர கன்னடா மாவட்டத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என மீட்புக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அங்கோலா தாலுகா சிரூர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் மண்ணில் புதைந்தனர். தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த 3 டேங்கர் லாரிகள் மற்றும் வீடு ஒன்று நிலச்சரிவில் சிக்கின.
மண்ணில் புதைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேரை மீட்புக்குழு மீட்டது. மாயமான 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.