வீடு தோறும் குடிநீர் திட்டம், குஜராத் மாநிலத்தில் முழுமை அடைந்தது- பிரதமர் மோடி பாராட்டு
- உலகின் தூய்மையான கடற்கரைகள் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற்றது.
- குஜராத் மற்றும் லட்சத்தீவு பகுதி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குஜராத் மாநிலத்தில் வீடு தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, குஜராத் மக்களின் ஆர்வத்தைப் பாராட்டியுள்ளார். அனைவருக்கும் குடிநீர் வழங்கும் இயக்கத்திற்கு ஆதரவளித்த குஜராத் மக்களுக்கு வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் லட்சத்தீவில் உள்ள மினிக்காய், துண்டி, கட்மாட் ஆகியவை தூய்மையான கடற்கரைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக உலகின் தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் முத்திரை இந்த கடற்கரைகளுக்கும் கிடைத்துள்ளது. இதற்காக லட்சத்தீவு பகுதி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை மந்திரி பூபேந்திர யாதவின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இது மகத்தானது குறிப்பாக, இந்த சாதனைக்காக லட்சத்தீவு மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் கடற்கரைகள் சிறப்பானது. கடற்கரை தூய்மையை அதிகரிக்க மக்களிடையே உள்ள ஆர்வம் மிகப் பெரியதாகும் என்று கூறியுள்ளார்.