இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தல்: 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவு
- ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன.
- இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய திருநாட்டின் பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி முதல்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.
இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் 10.58 சதவீதம், சண்டிகரில் 11.64 சதவீதம், இமாச்சல பிரதேசத்தில் 14.35 சதவீதம், ஜார்க்கண்டில் 12.15 சதவீதம், ஒடிசாவில் 7.69 சதவீதம், பஞ்சாபில் 9.64 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 12.94 சதவீதம், மேற்குவங்க மாநிலத்தில் 12.63 சதவீதம் பதிவாகி உள்ளன.