இந்தியா

இதுவரை 11 - 2019லிருந்து காங்கிரஸ் பிரமுகர்களின் விலகல்கள்

Published On 2024-01-14 08:42 GMT   |   Update On 2024-01-14 11:50 GMT
  • மிலிந்த் தியோராவின் தந்தை முரளி தியோரா 2014ல் காலமானார்
  • காங்கிரஸ் கட்சியுடனான 55 வருட உறவை தியோரா குடும்பம் முடித்து கொண்டது

காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

இன்று காங்கிரஸின் முக்கிய பிரமுகரான மிலிந்த் தியோரா கட்சியை விட்டு விலகினார்.

யார் இந்த மிலிந்த் தியோரா?

காங்கிரஸ் கட்சி ஆதரவாளராக நீண்ட காலம் இருந்து வந்தவர் முரளி தியோரா (Murli Deora). மும்பை மேயராகவும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராகவும், கேபினட் மந்திரியாகவும் பதவி வகித்த முரளி தியோரா 2014ல் காலமானார்.

முரளி தியோராவின் மகன், மிலிந்த் தியோரா.

47 வயதாகும் மிலிந்த் தியோரா (Milind Deora), தந்தையை போல் காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாக இருந்தார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றவர்.

2004ல் தெற்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று, பா.ஜ.க. வேட்பாளரை விட 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2011ல் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்றார்.

2012ல் கப்பல் போக்குவரத்து துறைக்கான அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கட்சியின் அமைப்புகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்தார்.

2019ல் மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இன்று, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதன் மூலம் 55 வருடங்களாக காங்கிரஸ் கட்சியுடன் இருந்த உறவை தியோரா குடும்பம் முடிவுக்கு கொண்டு வந்தது.


2019லிருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத், ஹர்திக் படேல், அஷ்வனி குமார், சுனில் ஜகார், ஆர்பிஎன் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, அல்பேஷ் தாகோர், அனில் ஆன்டனி உள்ளிட்ட பல பிரபலங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விட்டனர்.

மிலிந்த் தியோராவின் விலகலுடன் 2019லிருந்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை 11 ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News