இந்தியா

வேலைக்கே வருவதில்லை.. 17 மருத்துவர்கள் பணிநீக்கம் - அரசு அதிரடி

Published On 2024-07-12 02:08 GMT   |   Update On 2024-07-12 02:08 GMT
  • நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.
  • பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் நீண்ட காலமாக எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. இதை துணை முதல்-மந்திரியும், சுகாதார மந்திரியுமான பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அந்த 17 டாக்டர்களையும் அதிரடியாக பணி நீக்கி அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்ததாவது:-

நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும். மக்களுக்கு சேவை செய்வதும், சுகாதார பணிகளை வழங்குவதும் மிகப்பெரிய பாக்கியம்.

அதில் எந்தவித அலட்சியத்துக்கோ, ஒழுக்கக் கேட்டுக்கோ இடம் இல்லை.

ஆனால் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ அதிகாரிகளாக பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அலட்சியம் காட்டியுள்ளனர். அத்துடன் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.

எனவே அந்த 17 டாக்டர்களையும் பணியில் இருந்து நீக்குமாறு சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

இவ்வாறு துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியுள்ளார்.

துணை முதல்-மந்திரியின் இந்த உத்தரவு கிடைத்திருப்பதாகவும், அதன்படி நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.

Tags:    

Similar News