இந்தியா

ஜனவரி 22 அன்று பால் புரஸ்கார் விருதுகள் வழங்குகிறார் ஜனாதிபதி முர்மு

Published On 2024-01-20 08:20 GMT   |   Update On 2024-01-20 09:25 GMT
  • பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு விருதுகளுக்கு குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
  • விருது பெற்ற அடுத்த தினம், பிரதமர் மோடி குழந்தைகளை சந்திக்கிறார்

ஆண்டுதோறும், கலை மற்றும் கலாச்சாரம், வீரதீரம், புதுமை, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனைகளை புரிந்த 5லிருந்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு பிரதான் மந்த்ரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) விருதுகள் வழங்கப்படுகிறது.

பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு ஒரு பதக்கமும், சான்றிதழும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும்.

ஜனவரி 22 அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, இவ்வருடத்திற்கான பால் புரஸ்கார் விருதுகளை 19 குழந்தைகளுக்கு வழங்குகிறார்.

புது டெல்லியில் உள்ள "விஞ்ஞான் பவன்" (Vigyan Bhawan) அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதே தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச அயோத்தியா நகரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பகவான் ஸ்ரீஇராமர் கோவிலில் "பிரான் பிரதிஷ்டா" நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஜனவரி 23 அன்று, ""பால் புரஸ்கார்" விருதுகளை பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

இம்முறை, 18 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 2 முன்னேற்றத்திற்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் (aspirational districts) ஆகியவற்றில் இருந்து 9 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமியர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, விருது பெற்றவர்களுடன் உரையாட உள்ளார்.

Tags:    

Similar News