இந்தியா

2 பேர் உயிருடன் எரித்துக் கொலை.. 6 பேர் மாயம்.. மணிப்பூர் விரையும் 2000 வீரர்கள் - மீண்டும் பதற்றம்

Published On 2024-11-13 05:16 GMT   |   Update On 2024-11-13 05:16 GMT
  • எரித்துக்கொலை செய்யப்பட்ட முதியவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
  • கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு வருட காலமாக கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் சமீப நாட்களாக தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களிடையே அரசின் பழங்குடியின அந்தஸ்து முடிவால் வெடித்த சண்டை கடந்த வருடம் மே மாதம் கலவரமாக மாறியது.

கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் கொலைகளும் அரங்கேறின. 200 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

கலவரத்தால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். ஒன்றரை வருடத்திற்கு நூலாகியும் இன்னும் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப வில்லை. இந்நிலையில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் ஜிர்பாம் பகுதியில் 13 பேர் நேற்று மாயமானதாகவும், இதில் ஐந்து பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேரை இன்னும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மெய்தேய் இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

அவர்களின் உடல்கள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

எனவே நிலைமை கையை மீறியுள்ளதால் கூடுதலாக 20 மத்திய ஆயுதக் காவல்படை [CAPF] கம்பெனிகளை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சுமார் 2000 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். உடனடியாக இவர்களை மணிப்பூர் அனுப்ப நேற்று இரவு இந்த அவசர உத்தரவை பிறப்பித்ததாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News