இந்தியா

இந்தியாவில் ஆண்டுக்கு 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடும்- உலக வங்கி அதிர்ச்சி தகவல்

Published On 2022-12-01 04:38 GMT   |   Update On 2022-12-01 04:38 GMT
  • இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது.
  • அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது.

இந்த நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 16 கோடி முதல் 20 கோடிப்பேர் இந்தியாவில் கொடிய வெப்ப அலைகளுக்கு ஆளாகிற அபாயம் உள்ளது.

* இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. மாற்றுமுறை மற்றும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இடங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக 2040-ம் ஆண்டுவாக்கில் 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.131 லட்சம் கோடி) முதலீட்டு வாய்ப்பு உருவாகும்.

* அதிக ஆற்றல் கொண்ட பாதைக்கு மாறுவது, அடுத்த இரு பத்தாண்டுகளில் கார்பன்டை ஆக்சைடு அளவை மிகவும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.

* மேலும் பசுமைக்குடில் வாயுக்கள் அளவையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும். 37 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

* போக்குவரத்தின்போது வெப்பத்தால் உணவு இழப்பு ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 600 கோடி) அளவுக்கு ஏற்படலாம்.

* தற்போதைய அளவுடன் ஒப்பிடுகையில் 2037-ம் ஆண்டுக்குள் குளிரூட்டும் தேவை 8 மடங்கு அதிகரிக்கும். அதாவது ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குளுகுளு சாதன (ஏ.சி.எந்திரம்) தேவை ஏற்படும். இதனால் அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News