மேகவெடிப்பு, கனமழை: சிக்கித் திணறும் இமாச்சல், உத்தராகண்ட்.. சரிந்து விழுந்த கட்டிடம்.. பகீர் வீடியோ
- உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
- கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது.
பருவமழை பாதிப்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவிக்கின்றன. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த வரிசையில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் மேக வெடிப்பு காரணமாக கனமழை வெளுத்து வாங்குகிறது.
சிம்லாவை அடுத்த ராம்பூரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மேக வெடிப்பு தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
இந்த குழுவில் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் அனுபம் காஷ்யப் மற்றும் மாவட்ட மூத்த காவல் துறை தலைவர் சஞ்சீவ் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். "எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி மேக வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் 20 பேர் மாயமாகி உள்ளனர்," என காஷ்யப் தெரிவித்தார்.
மேக வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி பகுதியிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது. மேலும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி உத்தராகண்ட் மாநிலத்தில் ஃபியூரி புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெய்து வரும் கனமழையில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.