செய்திகள் (Tamil News)

அசாம்,மேற்குவங்காளத்தில் 92 சட்டசபை தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

Published On 2016-04-10 06:37 GMT   |   Update On 2016-04-10 08:10 GMT
அசாம், மேற்கு வங்காளத்தில் 92 சட்டசபை தொகுதிகளில் 2–வது கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது.

கவுகாத்தி:

தமிழ்நாடு, புதுவை, அசாம், மேற்கு வங்காளம், கேரளா, ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம், புதுவை, கேரளாவில் மே 16–ந்தேதி ஒரே கட்டமாக ஒட்டுப்பதிவு நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதில் முதல் கட்டமாக அசாமில் 65 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. முதல் கட்ட தேர்தலில் அசாமில் 78.06 சதவீத வாக்குகளும், மேற்கு வங்காளத்தில் 80 சதவீத வாக்குகளும் பதிவானது.

நாளை (11–ந்தேதி) இந்த இரு மாநிலங்களிலும் 2–வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் 2–வது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 61 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 31 தொகுதிகளுக்கும் நடக்கிறது.

இதையடுத்து 92 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது. மேற்கு வங்காளத்தில் முதல்–மந்திரி மம்தாபானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அசாமில் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினர். முதல்–மந்திரி தருண்கோகாய் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

பா.ஜனதா பிரசாரத்தில் முதல்–மந்திரி தருண் கோகாய் ரூ.300 கோடி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது. 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா அறிவித்தார். அசாம் மாநில தேர்தலில் ஊழல் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டது.

இது ஓட்டுப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அசாமில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் பா.ஜனதா நம்புகிறது.

Similar News