செய்திகள் (Tamil News)

காளஹஸ்தி அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை திடீர் மரணம்

Published On 2016-06-15 08:43 GMT   |   Update On 2016-06-15 08:43 GMT
காளஹஸ்தி அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை திடீரென மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி:

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த பீரங்கி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. இவருக்கு 2 மனைவிகளும், 3 மகன்களும் உண்டு. முதல் மனைவியின் இளையமகன் ஜெயச்சந்திரா (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெயச்சந்திரா கடந்த ஒரு ஆண்டாக பெங்களூருவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து ஜெயச்சந்திரா சொந்த ஊருக்குத் திரும்பி வந்தார். கடந்த 11-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை ஜெயச்சந்திரா பரிதாபமாக இறந்தார்.

ஜெயச்சந்திரா இறந்த தகவலை உறவினர்கள் அவரின் தந்தைக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட வெங்கட்ரமணா, மகன் இறந்த தகவலை உறவினர்களுக்கு சொல்வது, வீட்டு வாசலில் பந்தல் போடுவது, துக்க நிகழ்ச்சிக்காக தூரத்தில் இருந்து வருபவர்களுக்கு உணவு தயாரிக்கும் ஏற்பாடுகளை செய்வது, மகனின் உடலை புதைக்க குழி தோண்டுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள், ஜெயச்சந்திராவின் உடலை ஒரு வாகனத்தில் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். மகனின் பிணத்தை பார்த்து வெங்கட்ரமணா கதறி அழுதார். ஜெயச்சந்திராவின் பிணத்தின் மீது விழுந்து, புரண்டு அழுதபோது அவர் மயக்கமடைந்து கீழே சரிந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சங்கராபுரம் பகுதியில் இருந்து ஒரு டாக்டரை வரவழைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டாக்டர், வெங்கட்ரமணாவை பரிசோதனை செய்தார். பரிசோதனையில் மகன் இறந்த அதிர்ச்சியில் வெங்கட்ரமணா மரணம் அடைந்து விட்டதாக கூறினார்.

மகன், தந்தை சடலத்தை உறவினர்கள் தனித்தனி பாடைகளில் கொண்டு சென்று ஒரே இடத்தில் வைத்து அடக்கம் செய்தனர். மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை திடீரென மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News