செய்திகள் (Tamil News)

தீவிரவாதத்தை எதிர்த்து போராட உலக சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: இந்திய ஜனாதிபதி வலியுறுத்தல்

Published On 2016-06-29 13:50 GMT   |   Update On 2016-06-29 13:50 GMT
தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு உலக சமுதாயம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 239 பேர் காயமடைந்துள்ளனர். உலகையே உலுக்கியுள்ள இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவ்வகையில், இஸ்தான்புல் தாக்குதலுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் துருக்கி மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும். தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

தீவிரவாத தீய சக்திகளுக்கு எதிராக போராடுவதற்கு உலக சமுதாயம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News