செய்திகள் (Tamil News)

சசிகலா புஷ்பா பாராளுமன்றம் சென்று வர பாதுகாப்பு அளிக்க வேண்டும்: டெல்லி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-08-06 03:18 GMT   |   Update On 2016-08-06 05:44 GMT
சசிகலா புஷ்பா எம்.பி. பாராளுமன்றம் சென்று வர பாதுகாப்பு அளிக்குமாறு டெல்லி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்-சபை உறுப்பினர் சசிகலா புஷ்பா சார்பில், டெல்லி ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அதனால் தனக்கு உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மேல்-சபையில் சசிகலா புஷ்பா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவருக்கு ஒரு காவலரை பாதுகாப்பு பணிக்கு டெல்லி போலீஸ் நியமித்தது. மனுதாரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு டெல்லி போலீஸ் கமிஷனர், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி விபின் சாங்கி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

சசிகலா புஷ்பா சார்பில் மூத்த வக்கீல் சுதீர் நந்ரஜோக் ஆஜராகி வாதாடுகையில், “மனுதாரரின் வீடு தாக்கப்பட்டு உள்ளது. கட்சியை விட்டு விலக்கப்பட்ட பிறகு அவருடைய உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. அவருடைய டெல்லி வீட்டுக்கான பாதுகாப்பு போதாது. அவர் வெளியில் செல்லும் போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகுல் மெஹரா வாதாடுகையில், “ஏற்கனவே, பகலில் நான்கு காவலர்களும், இரவில் நான்கு காவலர்களும் சசிகலா புஷ்பாவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர். எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது குறித்து ‘செக்யூரிட்டி ஆடிட்’ என்று சொல்லக்கூடிய பாதுகாப்பு தேவைக்கான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே தற்போதைய சூழ்நிலையில் வெளியில் செல்வதற்கு பாதுகாப்பு வழங்குவது சிரமமானது ஆகும்” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வீட்டுக்கு மட்டும் பாதுகாப்பு என்பது அரைகுறையாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியதோடு, சசிகலா புஷ்பா பாராளுமன்றம் சென்று வருவதற்கு வாகனத்துடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதற்கு டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், வீடு தவிர பாராளுமன்றம் சென்று வருவதற்கு மட்டும் வாகனத்துடன் கூடிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், பாதுகாப்பு தேவைக்கான அறிக்கை கிடைத்ததும், மேலும் எந்த வகையான பாதுகாப்பு இவருக்கு அளிப்பது என்பது குறித்து கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்து அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மத்திய உள்துறை, டெல்லி காவல்துறை ஆணையர் மற்றும் டெல்லி மாநில அரசு ஆகியவற்றின் சார்பிலும் நேற்று வக்கீல்கள் ஆஜர் ஆனார்கள். அவர்கள் விரைவில் தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்வதாக கோர்ட்டில் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் மீதான விசாரணையை வருகிற நவம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News