செய்திகள் (Tamil News)

உங்கள் தியாகம் வீண் போகாது: கருப்பு பணம் குறித்து பிரதமர் மோடி பேச்சு

Published On 2016-11-20 11:15 GMT   |   Update On 2016-11-20 11:50 GMT
ரூபாய் நோட்டுகள் ரத்தால் மக்கள் கடும் அவதிபட்டு வரும் நிலையில், மக்களின் தியாகம் வீண்போகாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
ஆக்ரா:

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

நாம் வசிக்க வேண்டிய வீட்டை நாமே கட்டுவோம். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. 2022-க்குள் அனைவருக்கும் வீடு இருக்கும். விவசாயிகள் முதல் ஆதிவாசிகள் வரை அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும். குடிசை பகுதி மக்களுக்கு வீடுகள் சமர்ப்பணம்.

கருப்பு பண ஒழிப்பில் மத்திய அரசுக்கு ஏழைகள் ஆதரவு அளித்து வருகின்றனர். உங்கள் தியாகம் எதுவும் வீண் போகாது என்று உறுதி அளிக்கிறேன். கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பணப் பரிவர்த்தனை சீராக 50 நாட்கள் ஆகும் என்று கூறி இருக்கிறேன். நான் கூறியவாறு 50 நாட்கள் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சீட்டு நிறுவனங்களை மக்கள் ஊக்குவிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News