செய்திகள் (Tamil News)

தெலுங்கானாவில் 40 சதவீத ஜன தன் வங்கி கணக்கில் ஒரு பைசாகூட இல்லை

Published On 2016-11-20 12:03 GMT   |   Update On 2016-11-20 12:03 GMT
தெலுங்கானா மாநிலத்தில் 76 லட்சம் பேர் ஜன தன் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர். ஆனால், 25 லட்சம் பேர் அதாவது 45 சதவீதம் பேர் அந்த கணக்கை பயன்படுத்தவில்லை.

ஐதராபாத்:

ஏழைகளும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கருதி பிரதமர் நரேந்திர மோடி ஜன தன் யோஜனா என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த பணமும் இருப்பில் வைக்காமல் வங்கி கணக்கை தொடங்க முடியும். இதன்படி நாடு முழுவதும 25 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர்.

ஆனால், தெலுங்கானா மாநிலத்தில் இந்த வங்கி கணக்கு முறையாக செயல்படாமல் உள்ளது. அந்த மாநிலத்தில் 76 லட்சம் பேர் ஜன தன் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர். ஆனால், 25 லட்சம் பேர் அதாவது 45 சதவீதம் பேர் அந்த கணக்கை பயன்படுத்தவில்லை. அவர்களுடைய கணக்கில் ஒரு பைசாகூட இருப்பில் இல்லை.

இந்த கணக்கை தொடங்குபவர்கள் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.2 ஆயிரம் பணம் கடனாக எடுத்து கொள்ளும் வசதி செய்யப்படும் என திட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கடன் தொகை உச்சவரம்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

ஆனாலும், இந்த கணக்கை நடைமுறை செய்வதில் வங்கிகள் போதிய அக்கறை காட்டவில்லை. மக்களும் வங்கிக்கு சென்று கடன் வாங்குவதற்கு தயக்கம் காட்டினார்கள். இதன் விளைவால் இந்த கணக்குகளின் செயல்பாடுகள் முடங்கிய நிலையிலேயே உள்ளன. மொத்தத்தில் 51 லட்சம் வங்கி கணக்குகளுக்கு ரூ.708 கோடி மட்டும் கடன் வழங்கி உள்ளனர்.

Similar News