செய்திகள் (Tamil News)

இந்திய ராணுவத்தின் வீரத்துக்கும் சேவைக்கும் தலை வணங்குகிறோம்: மோடி வாழ்த்து

Published On 2017-01-15 03:40 GMT   |   Update On 2017-01-15 03:40 GMT
ராணுவ தினத்தையொட்டி பணியில் இருக்கும் வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார்.

இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மழை, வெயில், பனி என்று பாராமல் எல்லைப்பகுதியை காவல் காத்து, தாய்நாட்டுக்காக ரத்தம் சிந்தி, சொந்த விருப்பு வெறுப்புகளை துச்சமென மதித்து வீரமரணம் எய்தி, தாய்நாட்டு மண்ணில் விதையாகிப் போன சரித்திர நாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் ராணுவ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் ராணுவ தினமான இன்று நமது வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் ஆகட்டும், பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு உதவி செய்வதில் ஆகட்டும், இந்திய ராணுவம் எப்போதுமே முதலிடத்தில் நின்று தலைமை தாங்கி வருகிறது.

125 கோடி இந்தியர்கள் அமைதியாக வாழ தங்களது உயிரை பணயம் வைத்து ராணுவ வீரர்கள் சேவையாற்றி வருகின்றனர். நமது ராணுவம் செய்துள்ள அனைத்துவகை தியாகங்களையும் பெருமிதத்துடன் நினைவுகூரும் இந்நாளில், இந்திய ராணுவத்தின் வீரத்தையும், மதிப்பிட முடியாத சேவைக்கும் தலை வணங்குகிறோம்.

தற்போது கடமையாற்றிவரும் வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இனிய ராணுவ தின நல்வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Similar News