செய்திகள் (Tamil News)

கோவாவில் 50 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படும்: ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை

Published On 2017-01-15 08:25 GMT   |   Update On 2017-01-15 08:25 GMT
பெண்களுக்கு ஏராளமான சலுகைகள் வாழங்கப்படும். கோவாவில் 50 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

பனாஜி:

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் சேர்த்து கோவா மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அடுத்த மாதம் 4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே, இரு மாநிலங்களிலும் தனி கவனம் செலுத்தி ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. கோவாவில் இதன் முதல்-மந்திரி வேட்பாளராக எல்பிஸ் கோமாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களுக்கு உதவுவதற்காக சமுதாய நீதி மையம் ஏற்படுத்தப்படும். மேலும் அவர்களுக்காக தனியாக இலவச சட்ட உதவி மையம் உருவாக்கப்படும். பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்ஸ் வழங்கப்படும்.

மேலும் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்ஸ் வழங்கப்படும்.

மாநிலத்தில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும். 24 மணி நேரமும் நவீன பஸ் வசதி ஏற்படுத்தப்படும். முக்கியமான இடங்களில் இலவச வை-பை வசதி செய்து தரப்படும். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங் கப்படும். அடுத்த 5 ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

ஏழைகள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். வாடகை வீடு விதிமுறைகள் எளிமையாக்கப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News