செய்திகள் (Tamil News)

நாடு முழுவதும் 22 பல்கலைக்கழகங்கள் போலி - யூ.ஜி.சி ஷாக் தகவல்

Published On 2017-03-22 00:16 GMT   |   Update On 2017-03-22 00:16 GMT
நாடு முழுவதும் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் 66 கல்லூரிகள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி) அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் 66 கல்லூரிகள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி)  அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நாடு முழுவதும் உள்ள போலி கல்வி நிறுவனங்கள்குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் மொத்தம் 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பட்டியலில், தலைநகர் டெல்லிதான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு, மொத்தம் 66 கல்லூரிகள் போலியானவையாம். முக்கியமாக,நாடு முழுவதும் உள்ள 23 போலி பல்கலைக்கழகங்களில், ஏழு பல்கலைக்கழகங்கள் டெல்லியில் உள்ளதாம்.

இந்தக் கல்லூரிகள் அனைத்தும் டிகிரி சான்றிதழ்களை வழங்கத் தகுதியற்றவை. அவை வழங்கும் சான்றிதழ்கள், போலியானவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மஹாரஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் போலி கல்வி நிறுவனங்கள் அதிகளவு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்கள் அந்தக் கல்லூரிகளில் சேர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் போலியான கல்லூரிகளின் விபரங்களை யூ.ஜி.சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News